‘மாப்ள’ நான் யாருனு கண்டுபிடி:

>> Saturday, October 18, 2008




செல்போன் கொடுமை:

செல்போன் வைத்திருப்பவர்கள் அவசியம் அனுபவிக்கும் கொடுமை இது. சில நேரம் புதிய எண்ணில் இருந்து ‘மிஸ்டு’ கால் வரும். திருப்பி கூப்பிட்டால் மறுமுனையில் இருந்து என்னடா மாப்ள நல்லா இருக்கியா, ‘ஜாப்’ எப்படி போயிட்டிருக்கு என உரிமையோடு குரல் வரும். யாராக இருக்கும் என நாம் மண்டையைக் குழப்புவோம்.
சில விநாடிகள் கழித்து, ஏன்டா பரதேசி இன்னுமாடா என்னை யாருன்னு கண்டுபிடிக்கலை?, நீ எல்லாம் ஒரு பிரண்டா என அபிஷேகம் கிடைக்கும். ‘நீங்க யாருனு சரியா தெரியலை’ என பதில் சொன்னால், ‘பார்த்தியா நாயே என்னை மறந்துட்ட, நீ எல்லாம் பெரிய ஆளுடா’ என மேலும் குழப்புவார்கள்.
குமாரா, வடிவேலா, மரிய பிரகாசா, சந்திரசேகரா என நாம் திக்கி திக்கி பழைய நண்பர்கள் பெயரைச் சொல்ல, அடப்பாவி என்னை உனக்குத் தெரியலையாடா என மீண்டும் நச்சரிப்பு பதில் வரும்.
யாராக இருக்கும் சின்ன வயசுலை ‘தேங்கா பன்’ வாங்கி தரலைனு சண்டை போட்டானே அந்த சீனிவாசனா இருக்குமோ, பள்ளிக்கூடத்தில் பொம்பளை புள்ளைங்க ஜடையை இழுத்து அடிவாங்கினானே அந்த சுப்ரமணியனா இருக்குமோ, பஸ்சுல டிக்கெட் எடுக்காம கண்டக்டரிம் குட்டு வாங்கினானே ‘மாங்கொட்டை’ மணிவேலா இருக்குமோ, அவனா இருக்குமோ, இவனா இருக்குமோ என யோசனைகள் பின்னோக்கி செல்லும்.
நான் யாருனு சொல்ல மாட்டேன் நீயே கண்டுபிடி என மீண்டும் நச்சரிக்க, இந்த செல்போனை யாருடா கண்டுபிடிச்சது என்ற எரிச்சல் நமக்கு வரும்.
சாரிங்க நான் வண்டி ஓட்டிட்டு இருக்கேன், அப்புறமா பேசறேன் என சொல்லும் போது தான். ‘டே, மாப்ள நான் தான்டா ராபர்ட் பேசறேன்டா, லச்சு தான் உன் நம்பரை கொடுத்தான், இப்ப ஞாபகம் வருதா’ என கேட்பார்கள். சாரிங்க எனக்குத் தெரியலை என நாம் சொல்லும் போது, இது நந்து தானே என எதிர்முனைக்காரர் பவ்யத்துடன் கேட்பார்.
இல்லைங்க அவர் வேலை விட்டு போய் ஒரு மாசம் ஆகுது. இது ஆபிஸ் போன், எனக்கு கொடுத்திருங்காங்க என காரித் துப்புவது போல பதில் சொல்வோம். எதிர்முனையில் அசடு வழிந்து ‘சாரி பாஸ் நான் நந்துன்னு நினைச்சுட்டேன்’ என லைன் துண்டிக்கப்படும். அவனும் குழம்பி, நம்மளையும் குழப்பி இது எல்லாம் ஒரு பொழப்பு என நொந்து கொள்ள வேண்டியது தான்.
-கருவாச்சி...

1 comments:

அப்பாவி முரு October 19, 2008 at 6:36 AM  

ஆமா பாசு, இவிங்க நம்மள கொலையா கொல்லுவனுங்க