எங்கேடா போனாய் அட ராமா....

>> Friday, October 31, 2008

உன் சீதை இலங்கையில்
சிறை வைக்கப்பட்டாள்
என்பதற்காக
பாலம் கட்டி போரிட்டாய்
உலகம் மெச்சியது
உன் சிறப்பை...

ஆனால் இப்போதோ
அங்கே ஆயிரமாயிரம்
சீதைகள்
சீரழிகின்றனர்
போரிட தயக்கம் ஏன்...
எங்கேடா போனாய் அட ராமா...

உன் மனைவி என்பதற்காகவா
கடல் தாண்டி சென்று
கயவர்களை அழித்தாய்...
அந்த வேகம் எங்கே
இப்போது மட்டும்
இலங்கை உனக்கு தூரமா
எங்கேடா போனாய் அட ராமா...


இனி ஒரு கம்பரோ, வால்மீகியால்
மட்டுமே
உன்னை உருவாக்க முடியும்
அவர்கள் கற்பனையில்
மட்டுமே
உன்னால் போரிட முடியும்

நீ ஒரு கதை நாயகன்
அவ்வளவு தான்
என்பதை நிரூபித்து விட்டாய்...

எங்கேடா போனாய் அட ராமா...

Read more...

ஐயா, கொஞ்சம் தொகுதி பக்கமும் வாங்க...

>> Saturday, October 18, 2008


ஷோரூம் திறப்பு விழாவிற்கு மட்டும் வரும் எம்.எல்.ஏக்களுக்கு....
தேர்தல் முடிஞ்சு முழுசா 3 வருஷம் ஆகப் போகுது. வீர வசனம் பேசி, ஓட்டு வாங்கி எம்.எல்.ஏ ஆனவர் இதுவரை காணலை. நம்மாளும் பிரியாணிக்கு ஆசைப்பட்டு, ஆப்பு வாங்கிக் கொண்டான். மக்களுக்கு என்ன தேவை என்பதில் அக்கறையே இல்லாத ஆளெல்லாம் எம்.எல்.ஏ ஆகிட்டான், மினிஸ்டர் ஆகிட்டான் என வேதனைப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.
தொகுதி பக்கம் வராத எம்.எல்.ஏ மூஞ்சியை போஸ்டரிலும், தினசரி பேப்பர் விளம்பரத்திலும் மட்டும் அடிக்கடி பார்க்க முடிகிறது. ஏதாவது ஒரு ஷோரூம் திறப்பு விழா, பணக்காரர் வீட்டு திருமண விழா, தனியார் பள்ளி, கல்லூரி ஆண்டு விழா இங்கெல்லாம் நம்மாளை (அதான் எம்.எல்.ஏ) பார்க்கலாம்.
ஆனால் மக்கள் பிரச்னைக்கு வாருங்கள் எனக் கூப்பிட்டால், சென்னைக்கு போகிறோம், டெல்லியில் மீட்டிங் என ஏதாவது ஒரு கதை அளப்பார்கள். தொகுதியிலுள்ள கிராம மக்கள் குடிக்க தண்ணி இல்லாம கஷ்டப்படுகிறார்கள் என்ற கவலை எல்லாம் அவர்களிடம் இல்லை. யார் பணம் தருகிறார்களோ அவர்கள் வீட்டு விஷேசத்திற்கு மட்டும் தான் போவேன் என சத்தியம் ஏதாவது செய்திருப்பர்கள்.
ஷோரூம் உரிமையாளர்கள் கொடுக்கும் பணத்தை நாமும் (கிராம மக்கள்) கொடுத்தால் தான் தொகுதி பக்கம் தலை காட்டுவார்கள் போலும். எம்.எல்.ஏக்களுக்கு ஒரு வேண்டுகோள்! தொகுதி பிரச்னைக்கு குரல் கொடுக்கிற மாதிரி மக்களிடம் நடிக்கவாவது செய்யுங்கள், அப்போது தான் அடுத்த முறை டெபாசிட் ஆவது வாங்க முடியும்.
-கருவாச்சி...

Read more...

‘மாப்ள’ நான் யாருனு கண்டுபிடி:




செல்போன் கொடுமை:

செல்போன் வைத்திருப்பவர்கள் அவசியம் அனுபவிக்கும் கொடுமை இது. சில நேரம் புதிய எண்ணில் இருந்து ‘மிஸ்டு’ கால் வரும். திருப்பி கூப்பிட்டால் மறுமுனையில் இருந்து என்னடா மாப்ள நல்லா இருக்கியா, ‘ஜாப்’ எப்படி போயிட்டிருக்கு என உரிமையோடு குரல் வரும். யாராக இருக்கும் என நாம் மண்டையைக் குழப்புவோம்.
சில விநாடிகள் கழித்து, ஏன்டா பரதேசி இன்னுமாடா என்னை யாருன்னு கண்டுபிடிக்கலை?, நீ எல்லாம் ஒரு பிரண்டா என அபிஷேகம் கிடைக்கும். ‘நீங்க யாருனு சரியா தெரியலை’ என பதில் சொன்னால், ‘பார்த்தியா நாயே என்னை மறந்துட்ட, நீ எல்லாம் பெரிய ஆளுடா’ என மேலும் குழப்புவார்கள்.
குமாரா, வடிவேலா, மரிய பிரகாசா, சந்திரசேகரா என நாம் திக்கி திக்கி பழைய நண்பர்கள் பெயரைச் சொல்ல, அடப்பாவி என்னை உனக்குத் தெரியலையாடா என மீண்டும் நச்சரிப்பு பதில் வரும்.
யாராக இருக்கும் சின்ன வயசுலை ‘தேங்கா பன்’ வாங்கி தரலைனு சண்டை போட்டானே அந்த சீனிவாசனா இருக்குமோ, பள்ளிக்கூடத்தில் பொம்பளை புள்ளைங்க ஜடையை இழுத்து அடிவாங்கினானே அந்த சுப்ரமணியனா இருக்குமோ, பஸ்சுல டிக்கெட் எடுக்காம கண்டக்டரிம் குட்டு வாங்கினானே ‘மாங்கொட்டை’ மணிவேலா இருக்குமோ, அவனா இருக்குமோ, இவனா இருக்குமோ என யோசனைகள் பின்னோக்கி செல்லும்.
நான் யாருனு சொல்ல மாட்டேன் நீயே கண்டுபிடி என மீண்டும் நச்சரிக்க, இந்த செல்போனை யாருடா கண்டுபிடிச்சது என்ற எரிச்சல் நமக்கு வரும்.
சாரிங்க நான் வண்டி ஓட்டிட்டு இருக்கேன், அப்புறமா பேசறேன் என சொல்லும் போது தான். ‘டே, மாப்ள நான் தான்டா ராபர்ட் பேசறேன்டா, லச்சு தான் உன் நம்பரை கொடுத்தான், இப்ப ஞாபகம் வருதா’ என கேட்பார்கள். சாரிங்க எனக்குத் தெரியலை என நாம் சொல்லும் போது, இது நந்து தானே என எதிர்முனைக்காரர் பவ்யத்துடன் கேட்பார்.
இல்லைங்க அவர் வேலை விட்டு போய் ஒரு மாசம் ஆகுது. இது ஆபிஸ் போன், எனக்கு கொடுத்திருங்காங்க என காரித் துப்புவது போல பதில் சொல்வோம். எதிர்முனையில் அசடு வழிந்து ‘சாரி பாஸ் நான் நந்துன்னு நினைச்சுட்டேன்’ என லைன் துண்டிக்கப்படும். அவனும் குழம்பி, நம்மளையும் குழப்பி இது எல்லாம் ஒரு பொழப்பு என நொந்து கொள்ள வேண்டியது தான்.
-கருவாச்சி...

Read more...

9 வது பாடவேளை:(9th period)

>> Thursday, October 16, 2008

1990களுக்கு முன் நம்மூர் பள்ளிகூடங்களில் குறைந்தபட்சம் 7 பாட வேளை (பீரீய்டு) அதிகபட்சம் 8 பாடவேளை உண்டு. 8வது பீரியடு முடியும் வரை மாணவன் வகுப்பில் காத்திருப்பது வேதனையான விஷயம். வகுப்பு முடியும் போது அண்ணா பிறந்தநாளில் ஆயுட்தண்டனை கைதி விடுதலை செய்யப்பட்ட பீலிங் ஏற்படும் எனக்கூட சொல்லலாம்.
கிராமங்களில் என்றால் கேட்க வேண்டியதில்லை. வகுப்பு முடிந்ததும் மாங்கொட்டையில் ‘கால்பந்து’, தென்னை மட்டையில் ‘கிரிக்கெட்’, அழுகிய கத்திரிக்காய், தக்காளியில் ‘சூறைப்பந்து’ விளையாடுவது அலாதியானது. காலையில் போட்ட வெள்ளை சட்டை இரவில் வீட்டிற்கு போகும் போது நிறம் மாறியே போயிருக்கும். அப்போதும் படிப்பில் முத்திரை பதித்தவர்கள் ஏராளம்.
ஆனால் இப்போதோ நிலைமையே வேறு, 9வது பாடவேளை என்ற அரக்கனால் பள்ளிக்குழந்தைகள் மனநோயாளியாக மாறி வருகிறார்கள் எனக்கூட சொல்லலாம். தமிழகத்தில் அனேக மாணவ, மாணவியர் தற்போது 9வது பாடவேளையை கட்டாயம் சந்தித்து வருகின்றனர். இந்த 9வது பிரீயடு காலையிலோ அல்லது மாலையிலோ இருக்கும். பள்ளிக்கு போகவில்லை என்றாலும் 9வது பீரியடில் அமர்ந்தாக வேண்டும். பள்ளி வகுப்பு வேளைகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்களோ இல்லையோ ஆனால் இந்த 9வது பிரிவு வகுப்பிற்கு கட்டாயம் முக்கியத்துவம் தந்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
9வது பீரீயடா அப்படி என்றால் என்ன, குழப்பமாக உள்ளதா? தனிப்பயிற்சி (டியூசன்) என்ற பெயரில் மாணவர்களை அலைக்கழிக்கும் பாடவேளை தான் இந்த 9வது பீரியடு.
முன்பெல்லாம் ஒரு வகுப்பில் மாணவனோ அல்லது மாணவியோ டியூசனுக்கு சென்றால் அம்மாணவனை சக மாணவ, மாணவியர் வேடிக்கையாக பார்ப்பார்கள். ‘அவனுக்கு படிப்பு சரியா வராது, அதனால் தான் டியூசனுக்கு செல்கிறான்’ என்ற கேலிப் பேச்சும் கேட்க முடியும்.
ஆனால் இப்போதோ டியூசனுக்கு செல்லாத மாணவன் இருந்தால் அந்த மாணவனை வேடிக்கையாக பார்க்கும் நிலை வந்துள்ளது. டியூசனுக்கு போக மாட்டான், இவனெல்லாம் எங்கே முன்னேறுவான் என்ற பேச்சு கேட்க முடிகிறது.
ஒரு சில அறிவு ஜீவிகள் டியூசனுக்கு செல்வதையே பெருமையாக நினைப்பதும் உண்டு. அதிலும் நான் இன்னாரிடம் டியூசன் செல்கிறேன், என் மகன் இன்னாரிடம் டியூசன் செல்கிறான் என பீற்றிக் கொள்பவர்களும் உண்டு.
இந்த டியூசனிலும் பல பிரிவுகள் உள்ளது. வகுப்பு ஆசிரியரிடம் டியூசன் செல்வது (அப்போது தான் வகுப்பில் சில சலுகைகள் கிடைக்கும்), உள்ளூர் ஆசிரியரிடம் செல்வது, டியூசன் ஸ்பெஷலிஸ்டிடம் (ஒரு சிலருக்கு இதுதான் பொழப்பு) என பல வகைகளில் டியூசன் நரகங்கள் உள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புக் பண்ணினால் மட்டுமே ஒரு சில கணித ஆசிரியரிடம் டியூசனில் சேர முடியும் என்ற வேடிக்கையும் உண்டு. இன்னும் ஒரு சில அறிவியல் ஆசிரியர்கள் ஒருபடி மேலே போய் வீட்டிலேயே ஆய்வகம் (லேப்) அமைத்துக் கொள்வதும் உண்டு. பள்ளிக்கூடங்களில் சொல்லித் தராததை டியூசனில் மட்டுமே கற்றுக்கொடுக்கும் ஆசாமிகளும் உண்டு. பள்ளிக்கூடத்திற்கு செல்கின்றனரோ இல்லையோ ஆனால் டியூசனுக்கு சரியான நேரத்தில் ஆஜராகி விடுகின்றனர்.
டியூசன் என்றால் மாதந்தோறும் ஒரு தொகை வசூலித்த காலம் போய், 12 மாதங்களுக்கும் சேர்ந்து முன்கூட்டியே ‘லம்பா’ (மொத்தமாக) ஒரு தொகையை வசூலித்துக் கொள்ளும் நிலைமை வந்துவிட்டது. அதுவும் முன் வருபவர்களுக்கே முன்னுரிமை, சீட் புல்லானால் டியூசனில் இடமில்லை. எந்த பள்ளிக்கூடத்தில் மகன் படிக்கிறான் என்பதை காட்டிலும் யாரிடம் டியூசன் செல்கிறான் என கூறுவதையே பெருமையாக நினைக்க துவங்கியுள்ளனர் பெற்றோர்கள்.
வகுப்பு ஆசிரியர் டியூசன் எடுப்பவராக இருந்தால் அவரிடம் கட்டாயம் அனைவரும் டியூசனுக்கு சென்றாக வேண்டும். வர மறுப்பவர்களிடம் குறைந்த அக்கறை காட்டுதல், மற்ற மாணவர்கள் முன்பு அசிங்கப்படுத்துதல் உள்ளிட்ட தண்டனையும் உண்டு. டியூசனுக்கு வரும் மாணவர்களுக்கோ மாதிரித் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே கொடுத்து விடுதல், மாதிரி தேர்வில் கூடுதல் மதிப்பெண் உள்ளிட்ட சலுகைகள்.
10,12ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே டியூசனுக்கு சென்ற காலம் போய், தற்போது எல்.கே.ஜி, யு.கே.ஜி குழந்தைகளும் கூட 9வது பீரியடிற்குள் நுழைக்கப்பட்டுள்ளனர். ‘‘வீட்டில் இருந்தால் குறும்பு செய்வான்’’ இது பெற்றோர் கூறும் காரணம். நான்கைந்து வயதில் குறும்பு செய்யாதவன் குழந்தையாகவே இருக்க முடியாது. வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே (டியூசனுக்கு அனுப்பிவிட்டு) பிஞ்சு குழந்தைகளை பிரிந்து இருக்கின்றனர். இதனாலும் குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையேயான இடைவெளி நீண்டு வருகிறது எனலாம். பள்ளிக் கூட ஹோம்வொர்க்கை டியூசனில் செய்வதும், டியூசன் ஹோம்வொர்க்கை பள்ளி வகுப்பில் செய்வதையும் தெரியாமல் பணத்தையும், நேரத்தையும் இழக்கின்றனர்.
படிப்பில் கவனம் செலுத்த முடியாத நபர்களுக்கு மட்டுமே துவங்கப்பட்ட இந்த டியூசன், அனைவருக்கும் கட்டாய வகுப்பாக மாறியது தான் வேடிக்கை, வேதனை...
ஒரு சில நேரங்களில் புத்திசாலிகளையும் முட்டாளாக்கிவிடும் இந்த 9வது பீரியடு.
வணிக ரீதியான கல்வியை சமாளிக்க மேலும் மேலும் போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
9வது பீரியடு...அவசியம் தானா சிந்தியுங்கள்...

Read more...

சிறை நிலாக்கள்

>> Tuesday, October 14, 2008


சிறை வைக்கப்பட்ட நிலாக்களாக...
வரிசையாய் விளக்குகள்..
இரவில் ரசித்து
பகலில் வரைந்தது:
கோவை உக்கடம் மேம்பாலம்.

Read more...

சுனாமி


வழக்கமாய் மனிதர்கள் கடலுக்குள் வலைவீசி
மீன் பிடிக்க......
வித்யாசமாய் ஒருநாள் கடல் வலைவீசி
மனிதர்களை பிடித்தது.....
சுனாமி

Read more...

சே குவேரா..


உலகின் எங்கோ ஓர் மூலையில்
நடக்கும் அநியாயத்தைக் கண்டு
உங்கள் மனம் பொங்கி எழுகின்றதா...
அப்படி என்றால் நீங்களும்
எனது தோழரே...

-சே...

Read more...