9 வது பாடவேளை:(9th period)
>> Thursday, October 16, 2008
1990களுக்கு முன் நம்மூர் பள்ளிகூடங்களில் குறைந்தபட்சம் 7 பாட வேளை (பீரீய்டு) அதிகபட்சம் 8 பாடவேளை உண்டு. 8வது பீரியடு முடியும் வரை மாணவன் வகுப்பில் காத்திருப்பது வேதனையான விஷயம். வகுப்பு முடியும் போது அண்ணா பிறந்தநாளில் ஆயுட்தண்டனை கைதி விடுதலை செய்யப்பட்ட பீலிங் ஏற்படும் எனக்கூட சொல்லலாம்.
கிராமங்களில் என்றால் கேட்க வேண்டியதில்லை. வகுப்பு முடிந்ததும் மாங்கொட்டையில் ‘கால்பந்து’, தென்னை மட்டையில் ‘கிரிக்கெட்’, அழுகிய கத்திரிக்காய், தக்காளியில் ‘சூறைப்பந்து’ விளையாடுவது அலாதியானது. காலையில் போட்ட வெள்ளை சட்டை இரவில் வீட்டிற்கு போகும் போது நிறம் மாறியே போயிருக்கும். அப்போதும் படிப்பில் முத்திரை பதித்தவர்கள் ஏராளம்.
ஆனால் இப்போதோ நிலைமையே வேறு, 9வது பாடவேளை என்ற அரக்கனால் பள்ளிக்குழந்தைகள் மனநோயாளியாக மாறி வருகிறார்கள் எனக்கூட சொல்லலாம். தமிழகத்தில் அனேக மாணவ, மாணவியர் தற்போது 9வது பாடவேளையை கட்டாயம் சந்தித்து வருகின்றனர். இந்த 9வது பிரீயடு காலையிலோ அல்லது மாலையிலோ இருக்கும். பள்ளிக்கு போகவில்லை என்றாலும் 9வது பீரியடில் அமர்ந்தாக வேண்டும். பள்ளி வகுப்பு வேளைகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்களோ இல்லையோ ஆனால் இந்த 9வது பிரிவு வகுப்பிற்கு கட்டாயம் முக்கியத்துவம் தந்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
9வது பீரீயடா அப்படி என்றால் என்ன, குழப்பமாக உள்ளதா? தனிப்பயிற்சி (டியூசன்) என்ற பெயரில் மாணவர்களை அலைக்கழிக்கும் பாடவேளை தான் இந்த 9வது பீரியடு.
முன்பெல்லாம் ஒரு வகுப்பில் மாணவனோ அல்லது மாணவியோ டியூசனுக்கு சென்றால் அம்மாணவனை சக மாணவ, மாணவியர் வேடிக்கையாக பார்ப்பார்கள். ‘அவனுக்கு படிப்பு சரியா வராது, அதனால் தான் டியூசனுக்கு செல்கிறான்’ என்ற கேலிப் பேச்சும் கேட்க முடியும்.
ஆனால் இப்போதோ டியூசனுக்கு செல்லாத மாணவன் இருந்தால் அந்த மாணவனை வேடிக்கையாக பார்க்கும் நிலை வந்துள்ளது. டியூசனுக்கு போக மாட்டான், இவனெல்லாம் எங்கே முன்னேறுவான் என்ற பேச்சு கேட்க முடிகிறது.
ஒரு சில அறிவு ஜீவிகள் டியூசனுக்கு செல்வதையே பெருமையாக நினைப்பதும் உண்டு. அதிலும் நான் இன்னாரிடம் டியூசன் செல்கிறேன், என் மகன் இன்னாரிடம் டியூசன் செல்கிறான் என பீற்றிக் கொள்பவர்களும் உண்டு.
இந்த டியூசனிலும் பல பிரிவுகள் உள்ளது. வகுப்பு ஆசிரியரிடம் டியூசன் செல்வது (அப்போது தான் வகுப்பில் சில சலுகைகள் கிடைக்கும்), உள்ளூர் ஆசிரியரிடம் செல்வது, டியூசன் ஸ்பெஷலிஸ்டிடம் (ஒரு சிலருக்கு இதுதான் பொழப்பு) என பல வகைகளில் டியூசன் நரகங்கள் உள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புக் பண்ணினால் மட்டுமே ஒரு சில கணித ஆசிரியரிடம் டியூசனில் சேர முடியும் என்ற வேடிக்கையும் உண்டு. இன்னும் ஒரு சில அறிவியல் ஆசிரியர்கள் ஒருபடி மேலே போய் வீட்டிலேயே ஆய்வகம் (லேப்) அமைத்துக் கொள்வதும் உண்டு. பள்ளிக்கூடங்களில் சொல்லித் தராததை டியூசனில் மட்டுமே கற்றுக்கொடுக்கும் ஆசாமிகளும் உண்டு. பள்ளிக்கூடத்திற்கு செல்கின்றனரோ இல்லையோ ஆனால் டியூசனுக்கு சரியான நேரத்தில் ஆஜராகி விடுகின்றனர்.
டியூசன் என்றால் மாதந்தோறும் ஒரு தொகை வசூலித்த காலம் போய், 12 மாதங்களுக்கும் சேர்ந்து முன்கூட்டியே ‘லம்பா’ (மொத்தமாக) ஒரு தொகையை வசூலித்துக் கொள்ளும் நிலைமை வந்துவிட்டது. அதுவும் முன் வருபவர்களுக்கே முன்னுரிமை, சீட் புல்லானால் டியூசனில் இடமில்லை. எந்த பள்ளிக்கூடத்தில் மகன் படிக்கிறான் என்பதை காட்டிலும் யாரிடம் டியூசன் செல்கிறான் என கூறுவதையே பெருமையாக நினைக்க துவங்கியுள்ளனர் பெற்றோர்கள்.
வகுப்பு ஆசிரியர் டியூசன் எடுப்பவராக இருந்தால் அவரிடம் கட்டாயம் அனைவரும் டியூசனுக்கு சென்றாக வேண்டும். வர மறுப்பவர்களிடம் குறைந்த அக்கறை காட்டுதல், மற்ற மாணவர்கள் முன்பு அசிங்கப்படுத்துதல் உள்ளிட்ட தண்டனையும் உண்டு. டியூசனுக்கு வரும் மாணவர்களுக்கோ மாதிரித் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே கொடுத்து விடுதல், மாதிரி தேர்வில் கூடுதல் மதிப்பெண் உள்ளிட்ட சலுகைகள்.
10,12ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே டியூசனுக்கு சென்ற காலம் போய், தற்போது எல்.கே.ஜி, யு.கே.ஜி குழந்தைகளும் கூட 9வது பீரியடிற்குள் நுழைக்கப்பட்டுள்ளனர். ‘‘வீட்டில் இருந்தால் குறும்பு செய்வான்’’ இது பெற்றோர் கூறும் காரணம். நான்கைந்து வயதில் குறும்பு செய்யாதவன் குழந்தையாகவே இருக்க முடியாது. வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே (டியூசனுக்கு அனுப்பிவிட்டு) பிஞ்சு குழந்தைகளை பிரிந்து இருக்கின்றனர். இதனாலும் குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையேயான இடைவெளி நீண்டு வருகிறது எனலாம். பள்ளிக் கூட ஹோம்வொர்க்கை டியூசனில் செய்வதும், டியூசன் ஹோம்வொர்க்கை பள்ளி வகுப்பில் செய்வதையும் தெரியாமல் பணத்தையும், நேரத்தையும் இழக்கின்றனர்.
படிப்பில் கவனம் செலுத்த முடியாத நபர்களுக்கு மட்டுமே துவங்கப்பட்ட இந்த டியூசன், அனைவருக்கும் கட்டாய வகுப்பாக மாறியது தான் வேடிக்கை, வேதனை...
ஒரு சில நேரங்களில் புத்திசாலிகளையும் முட்டாளாக்கிவிடும் இந்த 9வது பீரியடு.
வணிக ரீதியான கல்வியை சமாளிக்க மேலும் மேலும் போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
9வது பீரியடு...அவசியம் தானா சிந்தியுங்கள்...
1 comments:
டியூசன் குறித்த உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மறுக்க முடியாத உண்மைகள் தான்.
ஆனால் பள்ளி ஆசிரியர், பெற்றோர் இவர்களை விட டியூசன் ஆசியிரியரிடம் மாணவர்களால் அதிக உரிமை எடுத்துக்கொள்ள முடிகிறது. பள்ளி பாடவேளைகளில் கேட்க தயங்கும் சந்தேகங்களை டியூசனில் தைரியமாக கேட்கமுடிகிறது. தனிப்பட்ட சுய பிரட்சனைகள் வரை டியூசன் ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
கல்வியில் என்று வியாபாரம் புகுந்ததோ அன்றே டியூசனில் மட்டுமல்ல கல்வி சார்ந்த எல்லா அமைப்புகளிலும் கொள்ளையும், போலியும் புகுந்துவிட்டது. கல்வி கூடங்கள் தேவை தான் ஆனால் வியபார கல்விகூடம் தேவையில்லை. டியூசன் தேவை தான் ஆனால் வியாபார நோக்கிலாவை தேவையில்லை.
பின் குறிப்பு: படித்து பட்டம் பெற்று வேலைவாய்ப்பில்லாமல் தவிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு சுய தொழில் டியூசன். அதுவும் ஆசிரியர் தொழிலுக்கு ஈடாக மதிக்கதக்கது தான்.
Word Verification எடுத்துவிடுங்கள். பின்னூட்டம் எழுத தடையாக இருக்கும். நன்றி
Post a Comment